ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி
மோ. கணேசன்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்கிறது.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசுத் துறை நிறுவனமான சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது. இப்பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள, குறிப்பாக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
கடந்த 2000-மாவது ஆண்டிலிருந்து தற்போது வரை 368 பேர்களை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வைத்திருக்கிறது இந்தப் பயிற்சி மையம். கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் ஏழாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்த பிரபுசங்கர், இந்நிறுவனத்தில் நேர்காணல் தேர்வுக்குப் பயிற்சி எடுத்தவரே. 2011-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்திலிருந்து ஐ.பி.எஸ். ஆக தேர்ச்சி பெற்ற தி.ஸ்ரீஜித்தும் இங்கு பயிற்சி பெற்றவர்தான்.
இங்கு பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது. பெண்களுக்கென தனி விடுதி வசதியும் உண்டு. 24 மணி நேரம் இணையதள வசதி, 21 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம், நேர்த்தியான வகுப்பு, ஒளி,ஒலி வகுப்பறை, தங்குமிடம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களை முழுமையாக தயார் செய்கிறது இப்பயிற்சி மையம். தரமான ஆசிரியர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள், தன்முனைப்புப் பயற்சிகள், ஊக்குவிப்புப் பயிற்சிகள், பாடவாரியான பயிற்சிகள், குழு விவாதம் உள்பட அனைத்தும் இங்கு உண்டு.
2014-ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத இருப்பவர்களுக்கு இலவசப் பயிற்சி நடத்துவதற்கான அறிவிப்பை இப்பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 01.08.2014 நிலவரப்படி விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் 21 வயது ஆனவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
முழு நேரப் பயிற்சியில் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 82 இடங்களும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 16 இடங்களும், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 36 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 48 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 6 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 4 இடங்களும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் பகுதி நேர பயிற்சிக்காக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு, உணவுக் கட்டணமும் இலவசம். இவர்கள், நூலக காப்புத் தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் உள்ள மாணவர்கள், உணவுக்கட்டணம் செலுத்த வேண்டும். நூலக காப்புத் தொகையாக ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் முழுநேர பயிற்சிக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பகுதி நேரப் பயிற்சியை மேற்கொள்ளும் அனைவரும், பயிற்சிக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். நூலக காப்புத் தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த தொகை பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும். பகுதி நேர பயிற்சி வகுப்புகளில் சேருவோருக்கு, வாராந்திர நாட்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, விடுதி வசதி வழங்கப்படமாட்டாது.
இத்தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தங்களது ஜாதி, வயது மற்றும் பட்டப்படிப்புச் சான்றுகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, உரிய விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சென்னையில் உள்ள பயிற்சி மைய வளாகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான, நுழைவுத் தேர்வு நவம்பர் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடத்தப்படுகிறது. இரண்டு மணி நேர அளவில் நடைபெற இருக்கும் இந்த நுழைவுத் தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். 100 கேள்விகளைக் கொண்ட இந்த நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள்.
சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் இத்தேர்வை எழுதலாம்.
இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் உயிரின பரிணாம வளர்ச்சி, அடிப்படை எண் அறிவு, பகுத்தறியும் திறன், பொதுப்புத்திக் கூர்மை மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் குறித்த விவரங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சி மையம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் முதல் இருநூறு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியும், இலவச தங்குமிடமும் வழங்க இருக்கிறது. இதுமட்டுமின்றி வேலை செய்துகொண்டே, பகுதி நேரமாக பயிற்சி பெற விரும்பும் 100 பேரை தேர்வு செய்து அவர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதத்திலிருந்து முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி தொடங்க உள்ளது.
பயிற்சி நிலையத்தின் முகவரி:
முதல்வர்,
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம்,
163/1, ‘காஞ்சி கட்டிடம்’, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
(கீரின்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை-600 028.
விவரங்களுக்கு: www.civilservice coaching.com
தொலைபேசி: 044-24621475
முக்கிய தேதிகள்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.10.2013
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : 10.11.2013
No comments:
Post a Comment